கண்களை சற்று மூடினேன்
காகம் தன் சிறகால் அனைத்ததுபோல் ஓர் இருள்
அதன் சிறகுகளின் சலசலப்பில் உலகம் சற்று அமைதியானது
கால்கள் பதித்ததின் கீறல் ஒரு ராகம் மீட்டியது
காற்றிர்கே அறியாமல் இதயத்தின் தாளம் மாற்றி
இரத்தநாளங்களுடன் புனைந்து கொண்டன
அதை கவியாய் இக்காகிதத்தில் வரைய
தோல்கீறி வார்த்தைகளை வடிக்கவேண்டும்
இசையை உன் கண்கள் உணர
Category: Tamil
ஆசை
உன் ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கி
அதில் ஒளிர்க்கும் முத்தை தேடிடவேண்டும்.
உன் எரிக்கும் கோபத்தில் கரிந்து
அதை கலைக்கும் வைரம் ஆகிடவேண்டும்
உன் மௌனத்தை கலைக்கும் சிரிப்பை
நானே வித்திடவேண்டும்
உன் கண்கள் கரையும் துளிகளை
இருகரத்தால் ஏந்திடவேண்டும்
உனை வர்ணிக்க ஓர் நாளாவது
நான் கவியாகிடவேண்டும்
அதை நீ பாடும் பொழுதினில்
நான் தமிழாகிடவேண்டும்
நரைகூடி நடைபழக கடற்கரை மனலில்
நாம் தத்தி தடுமாறி கரம்தழுவ
ஒருபோல் எண்ணங்கொண்டு இன்றை
இதை எண்ணி நகைத்திடவேண்டும்
போதை
அவள் செவிகளில் விழ வேண்டிய கவிதைகளை
இங்கே தட்டி நான் விட்டெறிகிறேன்
இந்த பொழுதுகள் கழியவே
தேனாயில்லாவிடினும் புளித்து மதுவாய் மாறு
போதை ஒருநாள் தீரும்
அன்று பருகுகிறேன்.
அணைப்பு
உன் கரங்களுக்கிடையே என்னை அணைத்திருக்க
உன் மார்புகளுக்கிடையே முகம் புதைத்து
அழும் கண்ணீருடன் என் துன்பங்கள் கரையப்போவதில்லை
ஆனால் இன்றைய இரவுக்கது போதுமானதாகிறது
கருமம்.
யாரையாச்சும் காரித்துப்பலாம்னா,
அகண்ட பால்வெளியை
முழுவீச்சில் சுழன்றுவந்து
நம்முதுகிலேயே விழுது.
கருமம்.
பட்டத்தின் வினை
கடற்கரையில் பட்டாம்பூச்சிக்கு என்ன வேலை
தேன் வார்க்கும் பூக்களுமில்லை
உடன் பறக்க நட்புக்களுமில்லை
கரை நோக்கி வீசும் எதிர்காற்றில்
தன் சிறகுகளை கூர் தீட்ட
மனல்மோதும் அலைகள் மேலே பயணிக்கறதா
இல்லை சிறகடிப்பால் காற்றை செதுக்கி
நாளை என்றோ எங்கோ வரவிருக்கும்
ஒரு சூறாவளியை மெல்ல வடிக்கிறதோ
திண்ணைக்கிழவி
திண்ணையி லமர்ந்து பாக்கிடித்து
வெற்றிலை யிடுகிறாள் கிழவி
ஓடிவந்த பேரமார் கைதட்டி
அனைவருக்கும் வாஞ்சையுடன் பங்கிட்டால்
சுன்னாம்பு கார துவர்க்கும் பாக்கையும்
முகந் துருத்தி சவைத்து துப்பி
ஒன்றாக நாநீட்டி ஆய்ந்து கொண்டனர்
ஒன்றுபோல் எல்லாம் குருதிச் சிவப்பே
இருந்தும் யார் நாவு சிவத்ததென்று
தம் வயதிற் கேற்றார்போலே தூர்பேசினர்
அதையொக்கக் களிபோலே கண்டு சிரித்த கிழவி
திரும்பி வருவர் பேரமாரென மீண்டும் இடிக்கலானாள்
தணல்
இந்த விட்டில்பூச்சி என்னைச் சுற்றியே
பறந்து கொண்டிருக்கிறது
தெருவிளக்கின் வெப்பத்தை மழை
நனைத்து விட்டிருந்தது
என் அறையின் குழல் விளக்கு
தணுத்து போயிருக்கவேண்டும்
என்னுள் எரியும் தணலைத் தேடி
ஒருவேளை வந்திருக்குமோ
இருக்காது…
இருப்பின் அது உன்னை காட்டிலும்
மேலான தாகக்கூடும்